காமதேனு பசுவின் கன்றுக்குட்டியின் பெயர் பட்டி. அந்த கன்று வழிபட்ட தலமாதலால் 'பட்டீஸ்வரம்' என்று பெயர் பெற்றது.
மூலவர் லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். இவருக்கு 'பட்டீஸ்வரர்' என்றும் 'தேனுபுரீஸ்வரர்' என்றும் இரண்டு திருநாமங்கள். அம்பிகை 'பல்வளை நாயகி' என்றும் 'ஞானாம்பிகை' என்றும் வணங்கப்படுகின்றாள்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது வெயில் அதிகமாக இருந்ததால், அவருக்கு முத்துப்பந்தல் அமைத்து அழைத்து வருக என்று சிவபெருமான் கட்டளையிட, அருகிலுள்ள சக்திமுற்றம் கோயிலிருந்து சம்பந்தருக்கு முத்துப்பந்தல் அமைத்து பட்டீஸ்வரம் அழைத்து வந்தனர். இதைக் காண சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்னாராம். ஆனி முதல் தேதியன்று முத்துப்பந்தல் திருவிழா நடைபெறுகிறது. திருப்பூந்துருத்தி, திருப்புன்கூர் ஆகிய தலங்களிலும் நந்தி விலகிய நிலையில் உள்ளன.
இக்கோயிலில் துர்க்கை சன்னதி மிகவும் சிறப்பு. பெரிய உருவத்துடன் அழகிய அலங்காரத்துடன் மகிஷாசுரன் தலைமேல் காலை ஊன்றி தரிசனம் தருவது அற்புதக் காட்சியாகும். பல்வேறு ஊர்களிலும் இங்கு வந்து துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.
இராமபிரான் வழிபட்டு சாயாஹத்தி தோஷம் நீங்கிய தலம். மார்கழி அமாவாசை அன்று இந்த ஐதீகம் நடைபெறுகின்றது.
அச்சுதப்ப நாயக்க மன்னர் காலத்தில் முதல் மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சிதர் பிறந்து திருப்பணி செய்த தலம். இவரும் துணைவியாரும் கைகுவித்து நிற்கும் திருவுருவங்கள் அம்மன் சந்நிதியின் தென்புறத்தில் உள்ளன.
இக்கோயிலின் எதிர்த் தெருவில் 'சத்திமுற்றம்' தேவாரத் தலம் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|